தப்பு தப்பா ஓட்டி, மணிகிட்ட திட்டு வாங்கி - என்ன திட்டினாலும் சிரிச்சுகிட்டே இருப்பேங்க.

இல்லாட்டி மணி சொல்லித்தர மாட்டான். சரியான மொசடு, ஆனால் நல்லவங்க. மறுபடியும் சொல்லிக் கொடுப்பாங்க. அப்புறம் எனக்கு அப்போல இருந்து இப்போது வரைக்கும் ஒரு வாட்டி சொன்னா புரியாது, இரண்டு மூன்று தடவை சொல்லணும். அப்போதான் கப்புனு பிடிச்சிப்பேங்க. யாருமே வராத ரோட்ல ஓரமா ஓட்டி கத்துகிறேன்னு முள்ளுமேல விழுந்து கை கால் எல்லாம் ஸ்ராய்ப்பு ஏற்பட்டது. உடனே மணி "அப்படி அடிப்பட்டா தான் உனக்கு சீக்கிரம் கத்துகிற ஆர்வம் வரும்." னு என்னைய உசுப்பேத்தி நிறைய அடிபட்டு ஒரு வழியா குரங்கு பிடல்ல போற அளவுக்கு கத்துகிட்டேங்க. அப்படி தனியா போகும்போது அவ்ளோ சந்தோசம் என்னோமோ ப்ளைட்ல போறதுபோல.. ம்
சைக்கிள் எடுத்துகிட்டு நேரா பொன்னி வீட்டு பக்கமா சுத்திகிட்டு இருந்தேன்.
பொன்னிய காணும். அப்புறம் பார்த்தா அது சைக்கிள் சீட்ல உக்காந்து எக்கி எக்கி பெடல் போட்டு சைக்கிள் ஓட்டிகிட்டு வருது. எப்படி இருக்கும் நமக்கு. பொன்னி "இப்போதான் குரங்கு பிடலே ஓட்டற. போ போ. உனக்கு எங்க கால் எட்டும்! நீ சைக்கிள் எல்லாம் ஓட்ட முடியாது"ன்னு என்னைய நல்ல ஓட்டிக்கிட்டு இருந்திச்சு. இதுக்குத்தான் இந்த பொன்னி இருக்கிற பக்கமே போறது கிடையாதுங்க.
அப்புறம் ஒரு வழியா சின்ன சைக்கிள் எடுத்து கம்பி மேல போட்டு எப்படியாவது சீட்ல உக்காந்து ஓட்டி கத்துக்கணும்னு வெறியில கீழ விழுந்து அடிபட்டேன். யாரும் நம்மை பாக்கறதுக்குள்ள எழுந்து விடலாம்னு பார்த்தா யாரோ ஒரு புண்ணியவான் எங்க தாத்தா கிட்ட போயி வத்தி வச்சுட்டாங்க. சாயங்காலம் வீட்டுக்கு போன பிறகு என்ன, எனக்கு கச்சேரி ஆரம்பம்தான். சும்மா சொல்லக் கூடாது. எங்க தாத்தா அடிக்கலைங்க. எல்லா மாட்டுக்கும் தண்ணி, வைக்கோல் எல்லாம் என்னைய வைக்கச் சொல்லிட்டு, அதுக்கு காவலா ஒரு ஆள் போட்டுவிட்டு டவுன் பக்கம் போய்ட்டார்.
அப்புறமா எங்க ஆத்தா கிட்ட கெஞ்சி இனிமே சைக்கிள் எடுக்கமாட்டேனு பொய் சொல்லிட்டு ஓடி வந்துவிட்டேங்க...
ஒரு வழியா சைக்கிள் கத்துக்கிட்டேன். அப்புறம் கொஞ்சம் doubles அடிக்கற அளவுக்கு கத்துக்கிட்டேங்க. அப்படியே கைய விட்டு போறது ரொம்ப பிடிக்கும். என்னதான் சைக்கிள் கத்துக்கிட்டாலும் எங்க வீட்டில உடனே சைக்கிள் வாங்கி கொடுக்கல. நான் முதல் ரேங்க் வாங்கினால் சைக்கிள் வாங்கி தருவோம்னு சொல்லிட்டாங்க.
இது எல்லாம் நடக்கிற காரியமா..?
கொஞ்ச வருசத்துக்கு சைக்கிள் பத்தி வீட்டில பேசவே மாட்டேன்.
ம்முனு மறுபடியும் சோகமா மூஞ்ச வச்சுக்கிட்டு இருப்பேன். ஒரு வழியா எட்டாம் வகுப்பில இரண்டவது ரேங்க் வாங்கினேங்க. (நம்புங்க ப்ளீஸ்.) அப்போதான் சைக்கிள் கிடைச்சது. அம்மாகிட்ட "அம்மா, என்னைவிட சின்ன பையன் எல்லாம் சைக்கிள் ஒட்ராங்க. எனக்கும் ஒரு சைக்கிள் வாங்கிக் கொடுங்க," ன்னு அடம் பிடித்து வாங்கிட்டேங்க.

புது சைக்கிள் ரெட் கலர். கேப்டன் வண்டி, முதல் தடவை புது சைக்கிள் வாங்கி அத ஓட்டிகிட்டு போற சுகம் இருக்கே. அனுபவித்தால்தான் தெரியும்.. அப்புறம் கைய விட்டு போறது பழகி போச்சு. வாரம் வாரம் சைக்கிள் எண்ணை போட்டு தொடச்சு புதுசு போலவே வச்சு இருப்பேன்.
இந்த சைக்கிள் வாழ்கையில மறக்கவே முடியாது. இது போல உங்களுக்கும் இருந்தால் சொல்லுங்க.
நன்றி வணக்கம்.
































