முஸ்கி : சும்மா கற்பனை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு.....

"ஏய்! அவன் இப்படி பண்ணுவானு எதிர்பார்க்கவே இல்லடா.. கூட இருந்தே இப்படி பண்ணுவானு.. கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம பண்ணிட்டு நம்மை எல்லாம் தலை குனிய வச்சுட்டு போய்ட்டான். அவன் மட்டும் என் கையில சிக்கினான்னு வை, மவனே அவன் காலிடா," என்றான் குமார்.
சதீஷ் "ஏன்டா அவனுக்கு மூளை இப்படி நாசமா போனது? எப்போவும் ஒண்ணும் தெரியாதவன் போல இருப்பான். நானும் எதிர்பார்க்கவில்லை, எனக்கு மண்டை வெடிச்சிடும் போல இருக்குடா," என்று அவன் பங்குக்கு
புலம்பித் தள்ளினான்.
"இதுக்குத்தான் அவன நம்மகூட சேர்க்காதீங்கனு அப்போவே சொன்னேன்," என்ற ரமேஷ் "நீங்க தான் பாவம் அது இதுன்னு சொல்லிவிட்டு இப்போ வந்து பொலம்பிக்கிட்டு இருக்கீங்க," என்று அவர்களை உசுப்பி விட்டான். "எனக்கு அப்போவே தெரியும். இந்த ராஸ்கல் எதாச்சும் பண்ணிட்டு நம்மை நாளைக்கு மாட்டிவிடாம போகமாட்டான் என்று," அவர்களை இன்னும் ஏத்தி விட்டுக் கொண்டு இருந்தான்.
சரி, விடுங்க அப்படி என்னதான் பண்ணிட்டான்னு கேக்கறீங்களா? அந்த மூணாவது தெரு மாரி.. நல்லவந்தாங்க எந்த பழக்கமும் இல்லை. ஆனாலும் இவர்களோடு எப்படியோ ஒட்டிக் கொண்டான். டெக்னிசியனாக ஒரு கம்பனியில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தான். பார்க்க சுமாராக இருந்தாலும் கொஞ்சம் அமைதியானவன். ஒரு கோவில் திருவிழாவில் அந்த கமலாவின் கருவிழியில் எப்படியோ மாட்டிக் கொண்டு யாருக்கும் தெரியாமல் பார்வையால் மனதை பரிமாறிக் கொண்டு... நம்ம
தமிழ் வாத்தியார் ராமசாமி பொண்ணு கமலாவ டாவடிச்சு... பொண்ண கூட்டிக்கிட்டு ஊரை விட்டு ஓடிட்டான்.
'எப்பவும் இந்த எடுபட்ட வீணாப் போன நண்பர்கள் கூட சேர்ந்துகொண்டு டீக்கடையில் போற வரவங்களை கிண்டல் பண்ணி காலத்தை ஓட்டினாலும், பையன் கில்லாடி தான் அந்த வாத்தியாருக்கு ஒரே பொண்ணு எப்படியும் அவர்களைக் கண்டு பிடிச்சு அடிய போட்டாலும் கடைசியா மருமகனா ஏத்துப்பாங்கனு ஒரு திட்டம் போட்டு பொண்ணை கொண்டு போய்ட்டான்,' என்று ஒன்றுக்கு நூறாக கிராமத்துக்குள் பேசிகொண்டார்கள்.
அவன் நண்பர்கள் எங்கு சென்றாலும் அவர்களையும் விடவில்லை தெரு மக்கள்.
ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கேள்வி கேட்டு ஒருவழி செய்து விட்டனர். எத்தனையோ முறை "அவன் எங்கு சென்றான் என்று தெரியாது," என்று கூறியும் விடவில்லை.
அந்த வாத்தியார் பாவம் நல்லவர். என்ன, திருக்குறள் தவறாகச் சொன்னால் முட்டி போடச் சொல்லுவார். திரும்பச் சரியாகச் சொல்லும் வரையிலும் விடமாட்டார்.
அவர் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. சொல்லித் திருந்தாத ஜென்மங்கள் பட்டுத் திருந்தட்டும் என்று சொல்லிவ் விட்டு அவர் வேலையைப் பார்க்கத் தன்னை மாற்றிக்கொண்டு விட்டார்.
கிராமத்திலும் ஒரு மாதம் மட்டும் அந்த பேச்சு இருந்து கொண்டுதான் இருந்தது. அவர் காதில் விழுந்தால் அப்போது அவர் கண்கள் கொஞ்சம் கலங்கும் தாய். இல்லாமல் பாசம் காட்டி வளர்த்த பெண் அல்லவா? இருந்தாலும் வெளிக் காட்டிக் கொள்ளாமல் அமைதியாய், 'தன் பெண் எங்கு இருந்தாலும் நலமாய் இருக்கட்டும்,' என்று வேண்டிக் கொண்டார்.
ஒரு சில உறவினர்கள் கூறும் கேலிப் பேச்சும் உற்ற நண்பர்கள் கூறும் ஆதரவும் அவரை ஏதும் செய்யவில்லை. மாறாக அவரின் மௌனம் அதிகம் ஆகியது. அந்த மௌனமே அனைவரின் பேச்சையும் குறைக்கச் செய்தது.
ஒரு வருடம் கழித்து ஒரு நாள் அவரின் மகள் கைக் குழந்தையுடன் கணவனோடு பிறந்த ஊருக்கு வருகிறாள். ஊரே வியப்புடன் பார்க்கின்றது. அவன் மிக நல்ல படியாக அவளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான் என்பதை அவளது புன்முறுவலில்,

முகத்தில் காட்டிய சந்தோஷத்தில் அனைவரும் அறிந்து கொண்டனர். ஒருவர் ஒருவராக விசாரிக்கத் தொடங்கினர்.
அனைவரிடமும் தன் கணவன் ஒரு நல்ல வேலை கிடைத்து வேறு ஊரில் தங்கிவிட்டதாகக் கூறினாள். அனைவரும் திட்டிய திட்டுகளை எல்லாம் மறந்துவிட்டு "நல்லபடியா இரும்மா," என்று வாழ்த்தி விட்டு அவளது வீடு வரைக்கும் வந்து அவளது தந்தையிடம் சமாதனம் பேசி ஏற்றுக்கொள்ளுமாறு கூறினர்.
தந்தையைக் கண்டதும் ஓடிச் சென்று காலில் விழுந்து அழ அவர் மனம் இளகி, பேரப்பிள்ளையும் மகளையும் அழைத்துக் கொண்டு வீட்டு சாமிமாடம் நோக்கிச் சென்றார். அவரின் மௌனமும் மெல்ல குழந்தையின் கொஞ்சலில் கரைந்தது.
ம்.. நம்ம மாரிமுத்து வீட்டில் முதலில் எற்றுக் கொள்ளாவிட்டாலும் பிறகு ஒருவழியாக அவர்களும் சம்மதம் சொல்லிவிட்டனர்.
அவனது நண்பர்கள் ரமேஷ், குமார் எல்லாம் வந்து அவனை கிண்டல், கேலியோடு கொஞ்சம் அடியும் போட்டு மீண்டும் டீக்கடையில் ஐக்கியம் ஆனார்கள்.

டிஸ்கி: இந்த வார தத்துவம்
"தோழி இருந்தா எனக்கு ஒரு கேர்ள் பிரண்டு இருக்குன்னு சொல்லலாம்
ஒரு கேர்ள் பிரண்டு இருந்தா எனக்கு ஒரு தோழி இருக்காங்கனு சொல்ல முடியாது...."