
மழை ரொம்ப நல்ல விசயம், ஆனால் ஒரு சிலருக்கு.
"ம்! இந்த பாழாப் போன மழை இருக்கே, நேரம் கேட்ட நேரத்தில வந்து இம்சையா கொடுக்குது," என்ற வசவுகளை கேட்டுக் கொண்டு இருந்த நேரத்தில் பெரு மழை வந்தது. தொப்பலாய் நனையும் முன்பு வீடு போய் சேர வேண்டும் என்று நினைத்துக்கொண்டு வண்டியை வேகமாய் செலுத்திக் கொண்டு இருந்தேன்.
அந்த நேரம் வேகமாய் காற்றும் அடித்தது. வண்டியில் வேகமாய்ப் போய் விடலாம்; இருந்தாலும் எதற்கு இவ்ளோ அவசரம் என்று அருகில் இருந்த மரத்தடியில் எனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அருகில் இருந்த நிழல்குடை கட்டிடத்தில் மழைக்கு நடுங்கிக் கொண்டு என்னைப் போல அங்கே காத்திருக்கும் கூட்டத்துள் நுழைந்தேன்.
தெரிந்த முகமாய் யாரவது இருக்கிறார்களா என்று கண்கள் தேடும்போது இரு காந்தவிழிகள்... என்னைப் பார்த்தும் பாராமலும் நிற்கும் ஒரு காந்த விழியாளைக் கண்டு கொண்டேன்.

கொஞ்சம் சந்தேகம்தான் காந்தக்கண்கள் பார்ப்பது நம்மையா இல்லை வேறு என் அருகில் இருக்கும் யாரையாவதா என்று சுற்றும் முற்றும் பார்த்தேன். நல்ல வேளை யாரும் இல்லை. ஏன் என்றால் அங்கு இருந்தவர்கள் எல்லாம் அறுபதை தாண்டிய முன்னாள் இளம் வாலிபர்கள். அவ்வாறு திரும்பி பார்க்கும் போது காந்தவிழி புன்னகைக்கவும் தவறவில்லை. இந்த இடத்தில் வைரமுத்து நின்று இருந்தால் ஒரு 'கள்ளிக்காட்டு இதிகாசம்' போல 'உன் புன்னகை காட்டும் இதிகாசம்' என்று கவிதை நூல் வெளியிட்டு இருக்கலாம்.
அந்த மழையிலும் மக்கள் அனைவரும் ஒவ்வொரு கதை பேசிக்கொண்டு இருந்தனர். அதில் ஒரு அக்கா, "என் தங்கச்சி ஊரில இருந்து போனவாரம் போன் போட்டு, அக்கா வத்தல் போட்டு வைக்கா. பசங்கலாம் வத்தல் கேக்கராங்க என்று கேட்டு இருந்தா. இன்னைக்கு வத்தல் போடலாம்னு இருந்தேன். இந்த சனியன் மழை வந்து ஒண்ணும் பண்ண விடாம பண்ணிட்டு," என்று பக்கத்தில் இருக்கும் பாட்டியிடம் அங்கலாய்த்துக் கொண்டு இருந்தது. அதற்கு அந்த பாட்டி சொன்ன பதில் கேட்டு நாங்கள் சிரித்துக் கொண்டோம்.
அந்த காந்த விழி அருகில் இருக்கும் கல்லூரியில் படித்துக் கொண்டு இருப்பது போல கையில் இரண்டு நோட்டுகளும் வைத்து இருந்தது. ஏதோ ஒரு தைரியம் பேச வேண்டும் என்று தோன்றியது.
"மழை எப்போது விடும் என்று தெரியல," என்று பொதுவாக பேச ஆரம்பித்தோம்.
சினிமா போல கனவா இல்லை நனவான்னு தெரியல. இருந்தாலும் உள்ளுக்குள் மனது மழை விடக்கூடாது என்று வேண்டிக் கொண்டு இருந்தது அந்த வத்தல் போட நினைக்கும் அக்காவுக்கு தெரிய வாய்ப்பு இல்லை.
உள்ளுக்குள் இந்த காந்தவிழியுடன் கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஊரில பேச முடியாது, ஏன் என்றால் எங்காவது நின்றால் கூட "உங்க பையன் அங்க எதுக்கு நிக்கரப்பல?" என்று தகவல் அப்பாவுக்குப் போய்விடும். கொஞ்சம் பயம் அதனால் எங்கும் நிக்கவும் மாட்டேன் காரணம் இன்றி எவரிடமும் பேசுவதும் கிடையாது. தெரிந்த முகம் என்றால் ஒரு புன்னகை அவ்வளவே. ரொம்ப அமைதியான பையன்னு ஊருக்குள்ள நமக்கு ஒரு பேரு. (நீங்க நம்ப மாட்டீங்களே.)
அந்த காந்தவிழி கல்லூரியில் படிப்பதாகவும், புதிதாய் அந்த ஊருக்கு குடி வந்து இருக்கும் போஸ்ட் மாஸ்டர் மகள் என்றும் அறிமுகப் படலம் ஆயிற்று. என்னைப்பற்றி கொஞ்சம் சுருக்கமாய் கூறிக்கொண்டேன். ஒரு விசயம் சொல்ல மறந்து விட்டேன் மழை விடுவதற்குள் நாங்கள் பேசும்போது எல்லாம் பக்கத்தில் இருந்த தாத்தா நூறுமுறை மணி கேட்டு தொல்லை பண்ணிவிட்டார். எனது கடிகாரத்தை அவரிடமே கொடுத்து விடலாம் என்று நினைத்தேன். அவருக்கு மணி பார்க்கத் தெரியுமா என்பது வேறு விசயம்.
மெல்ல மழை பெய்துகொண்டு இருந்தது. முன்பு மழை பிடித்தும் உணராமல் இருந்து இருக்கிறேன். இந்த மழை அழகாய்த் தெரிந்தது கொஞ்ச நேரம் மட்டுமே.
காந்தவிழியுடன் பொதுவான விசயங்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே மழை நிற்கும் போல சத்தம் குறைந்து ஒருவர் ஒருவராய் நகர ஆரம்பித்தனர். கடைசி வரை நின்று கொண்டு இருந்தது நாங்கள் மட்டும் இல்லை; மணி கேட்டு தொல்லை பண்ணின அந்த பல்லு போன தாத்தாவும்தான். பிறகு ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டு அவரவர் வீடு நோக்கி நகர ஆரம்பித்தோம்.
மழை நின்று விட்டது அவளின் காந்த விழிகள் என்னைவிட்டு போகவே இல்லை..... நாங்கள் நிஜமாவே பல்லுபோன தாத்தாவை திட்டவில்லை.
நீ வெறும் தூறலை
விட்டுச் சென்றால்
கவலை இல்லை.
அவளின் நினைவுகளை
அல்லவா
தூறிவிட்டு
சென்று விடுகிறாய்.
மழையே நீ நல்லா இருப்பியா...
அந்த மழை வராமல் போய் இருக்கலாம் என்று திட்டிக் கொண்டிருந்தோம்.

டிஸ்கி :
இந்த சின்ன முயற்சிக்கு பதிவில் உள்ள தவறுகளை திருத்தி மாற்றம் பண்ணிகொடுத்த இமா டீச்சர் அவர்களுக்கு மிக்க நன்றியும் அன்பும்..
