
மிதமான காலைப்பொழுது அழகாய் பகலவன் பல் துலக்கி அதிகாலையிலே எழுந்து விட்டான் போல. அதுவரை கனவில் இருந்தான் ஜீவா. அழகான கிராமம், பெயர் தெரியாத குருவிகளின் ரீங்காரம், குயில்களின் கூவல், பொழுது விடிந்து இரை தேடப் புறப்படும் பறவைகள், அல்லி அதிகமாக இருந்த குளக்கரை ஓரம் ஒற்றை காலில் நடனம் ஆடும் கொக்கு, நானும் இருக்கேன்னு குளக்கரையில் துள்ளிக் குதிக்கும் கெண்டை மீன்கள்...
இதமாய் ஒரு மெல்லிய காற்று படும் படாமலும் வீசிக்கொண்டு இருந்தது. இந்த இளஞ்சூரியன் லேசாய் சுட்டாலும் அது ஒரு வித உத்வேகம் கொடுத்தது. வண்டுகள் எல்லாம் அதன் பணியை தொடங்க ஆரம்பித்து விட்டன. பூக்களின் தேன் வாசம் காற்றில் வந்து கொண்டு இருந்தது.
அந்த சிறு கிராமம் மெல்ல எழுந்து கொண்டு இருந்தது.
அப்போதுதான், "மணி எட்டு ஆக போகுது. இன்னும் அந்த எரும மாடு எந்திரிக்கலையா?" என்று அம்மாவிடம் அப்பா கேட்டது லேசாக காதில் ஒலித்தாலும் அசந்த தூக்கமும் அந்த அழகான கனவும் அவனை படுக்கையில் இருந்து எழ விடவில்லை.

"அவனை விட சின்ன பிளைங்க எல்லாம் காலையில எழுந்து குளித்து அமைதியாக படித்து கொண்டு இருக்கின்றனர். இவனுக்கு மட்டும் ஸ்கூல் இல்லையா?" என்று எப்போதும் பேசும் பாராட்டுகள் ஒரு பக்கம் திரும்பி படுத்தாலும் கேட்டுக் கொண்டேதான் இருந்தது. மெல்ல கனவில் இருந்து எழுந்தான். அம்மா, "இந்தாடா, டீ குடிச்சிட்டு போ." என்று சொல்லி விட்டு அவர் சமையல் வேலையில் மும்முரமாய் இருந்தார்.
மெல்ல சோம்பல் முறித்து எழுந்து போர்வை எல்லாம் மடித்து வைத்து விட்டு குளிக்கச்சென்றான். குளித்து வந்து நேரம் பார்த்தப்போது மணி ஒன்பது ஆகி இருந்தது. 'ஆகா! நேரம் ஆகிவிட்டதே.' என்று உள்மனம் துடித்துக் கொண்டு இருந்தது. மனசுக்குள் புலம்பிக் கொண்டு இருந்தான் ஜீவா. பின்ன! லேட் ஆகி போனால் பள்ளி சென்று அங்கும் திட்டு வாங்க வேண்டுமே. பள்ளியைச் சுற்றி ஓடி வர வேண்டுமே, என்று விரைவாக அம்மா சுட்ட பஞ்சு இட்லியை மிளகாய்ப் பொடியோட தேங்காய் சட்னியையும் விட்டு வைக்காமல் சாப்பிட்டு முடித்து விட்டான்.
மதியம் சாப்பாடும் ரெடி பண்ணி அவன் பையில் வைத்திட்டு "மிச்சம் வைக்காம சாப்பிடு கண்ணா." என்று பாசத்துடன் கூறிய அன்னையின் வார்த்தைக்கு "சரிம்மா." என்று சொல்லிக்கொண்டு தனது மிதி வண்டி எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

இதில் ஜீவா சுமாராய்ப் படிப்பவன். ராஜேஷ் அவனுக்கு முன்னால் இருப்பவன், படிப்பதை பொறுத்து இருக்கும். கணேஷ் ஒரு அளவுக்கு படிப்பான். எப்படியோ மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து ஒன்றாய் படிப்பவர்கள். இன்று பிளஸ் 2 வரை வந்து விட்டனர். இப்படி இருக்க ஜீவா இன்னும் அந்த கிராமத்துக் கனவிலே லயித்து இருந்தான். காரணம் அந்த கனவில் வந்த....
ஓகே மீதி அடுத்த பகுதியில்...