
இந்த உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் ஒரு விதம், ஏன் ஒவ்வொரு தனி உலகம் என்றே சொல்லலாம்..
நான் சந்தித்த ஒரு சில நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்கிறேன்...
மும்முரமாய் மீன் குழம்பு வைத்துகொண்டு இருக்கும்போது ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது.
என் நண்பன் ரமேஷ் பத்து வருடம் கழித்து தொலை பேசியில் அழைத்து தன்னைக் கண்டுபிடிக்குமாறு கூறிய தினம், பிறகு கண்டு பிடிக்க இயலாமல் "நீங்கள் யாரு என்று கூறுங்கள்," என்று கெஞ்சி அவனிடம் திட்டு வாங்கி பிறகு நலம் விசாரித்து பழைய கதைகள் எல்லாம் பேசி சிறிது மகிழ்ந்த தினம் நேற்று.

பிறகு சாப்பிட்டு விட்டு அருகில் உள்ள பூங்காவுக்கு ஒரு நடைப்பயணத்தில்...
ஒரு அண்ணன் தங்கை இருவருக்கும் ஐந்தும் நான்கும் வயது இருக்கும். தன் தங்கை அழ அண்ணன் ஒரு கையில் இருந்த சாக்லட்டை அந்த தங்கையிடம் கொடுத்துக் கொண்டு இருந்த காட்சி மிக அழகானது. தங்கையும் பாதி கடித்துவிட்டு மீதியைத் திரும்ப அண்ணனுக்கு "இந்தா அண்ணே நீயும் சாப்பிடு," என்று கொடுத்த அந்தப் பாசமான காட்சி இன்னும் மனதில்....
முன்னர் ஒரு மாலை நேரத்தில் குட்டிக் குட்டிக் குழந்தைகள் மிக அழகாய் ஓடி விளையாடிக் கொண்டு இருந்தபொது அவர்களைக் கவனித்துக் கொண்டு இருக்கையில் ஒரு சின்னப் பையன் ஏதோ ஒன்றுக்குப் பிடிவாதம் பிடித்து, தரையில் விழுந்து புரண்டு பிறகு ஒருசில நிமிடத்தில் அதை மறந்து எழுந்து மற்றக் குழந்தைகளோட விளையாடச் சென்றது... அருமையான கணம்.
பிறகு பூங்காவில் வேகமாய் ஓடி வந்த ஒரு குட்டிப் பாப்பா கால் தவறி கீழே விழுந்துவிட்டது. அந்த நேரத்தில் யாராவது பார்க்கிறார்களா என்று சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, பார்க்க வில்லை என்றவுடன் வேகமாய் ஒரு புன்னகையுடன் விழுந்த அடி தெரியாமல் மறைத்துக் கொண்டு நடந்து சென்றதை தூரத்தில் இருந்து பார்க்கையில் மனதில் ஒரு நம்பிக்கை...
அருகில் உள்ள மரப்பலகையில் 'ஒரு காலத்தில் நானெல்லாம் அப்படி இப்பிடி' என்று மகிழ்ச்சியுடன் பழங்கதை கட்டிக்கொண்டு இருந்த பெருசுகள்.

வாழ்க்கையில் இந்த நிமிடம் மட்டுமே இருப்பதாய் நினைத்து இருக்கும் நிமிடத்தை சந்தோசமாய் அமைதியாய் நகர்த்த வேண்டும் என்று எண்ணி வரும் பிரச்சனைகளை மன உறுதியுடன் எதிர்கொள்ள அவ்விடத்தை விட்டு மெல்ல காற்றடிக்கும் திசையில் நடக்க ஆரம்பித்தேன்....
நட்பில் பிரிவு என்பது இல்லை
அப்படி பிரிந்தால் அது நட்பு இல்லை

எதிர்பாரா அன்புதான் எப்போதும்
சந்தோசம் தரும்...

வாசித்தமைக்கு நன்றி
வாங்க வாங்க எல்லாம் வெயிலில் வந்து இருப்பீங்க. ஜில்னுனு ஐஸ்கிரீம் சாப்பிடுங்க...

மீண்டும் சந்திப்போம்....